பெண்ணிடம் இணையவழியில் எட்டு லட்சம் மோசடி
தஞ்சாவூரில் இணையவழியிலான திருமண தகவல் தளம் மூலம் பெண்ணிடம் பழகி ரூ.8.26 லட்சம் மோசடி செய்த இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் கரந்தை பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண் இணையவழியிலான திருமண தகவல் தளத்தில் பதிவு செய்தார். இதைப் பார்த்து இவரிடம் சில மாதங்களுக்கு முன்பு தொடர்பு கொண்ட மர்ம நபர், தான் லண்டனில் பல் மருத்துவராக வேலை பார்த்து வருவதாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, வாட்ஸ் ஆப் மூலம் இருவரும் பழகி வந்தனர். இந்நிலையில், அப்பெண்ணுக்கு நகைகள் அனுப்பியுள்ளதாக மர்ம நபர் கூறினார். இதன் பின்னர் அப்பெண்ணிடம் கைப்பேசியில் கூரியர் சர்வீஸ் அலுவலகத்திலிருந்து பேசுவதாகக் கூறிய மற்றொரு மர்ம நபர், வெளிநாட்டிலிருந்து தங்களது பெயருக்கு பார்சல் வந்துள்ளதாகவும், அதற்கு வரி செலுத்தினால்தான் பார்சல் தர முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும், இதை நம்ப வைக்கும் விதமாக ஏற்கெனவே பழகி வந்த நபரும் வரித்தொகையைச் செலுத்திவிடுமாறும், இந்தியாவுக்கு திரும்பிய பிறகு தருவதாகவும் கூறினார். இதை நம்பிய அப்பெண் கூரியர் சர்வீஸ் அலுவலகத்திலிருந்து பேசுவதாகக் கூறிய நபருக்கு பல்வேறு தவணைகளாக ரூ.8.26 லட்சம் இணையவழி மூலம் செலுத்தினார். ஆனால், அதன் பின்னர் இருவரும் கைப்பேசியை அணைத்து விட்டதன் மூலம், தான் ஏமாற்றப்பட்டதை அப்பெண் உணர்ந்தார். இது குறித்து தஞ்சாவூர் இணையதளக் குற்றப் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.