நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியையிடம் 9 பவுன் நகை பறிப்பு
நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியையிடம் 9 பவுன் நகை பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் மனைவி மேரி எலிசபெத் (65). ஓய்வு பெற்ற தலைமையாசிரியை. இவர் இன்று பால் பண்ணை பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு உடல் நலம் பாதிப்பால் சிகிச்சைக்காக வந்தார்.
சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அதே பஸ் சந்திப்பில் இருந்து பஸ் ஏறி, பார்வதிபுரத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் சென்றார். அப்போது எலிசபெத் கழுத்தில் கிடந்த ஒன்பது பவுன் நகை மாயமாகி இருந்தது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மேரி எலிசபத் வடசேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். திருட்டுப் போன நகையின் மதிப்பு 2 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். மேரி எலிசபெத் பஸ்ஸில் சென்ற போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் கொள்ளையர்கள் அவரது கழுத்தில் கிடந்த நகையை பறித்திருக்கலாம் என்று தெரிகிறது. போலீசார் பால்பண்ணை சந்திப்பு மற்றும் பார்வதிபுரம் சந்திப்பு பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளியூர் பகுதியை சேர்ந்த பெண்கள் டிப்டாப் உடையில் வந்து கைவரிசை காட்டிவிட்டு தப்பி செல்வதாக புகார் உள்ளது. கடந்த சில நாட்களாக போலீசார் கண்காணிப்பை தீவிர படுத்திய நிலையில் திருட்டு சம்பவம் குறைந்து இருந்தது. இந்த நிலையில் மீண்டும் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.