திருவள்ளூர் மாவட்டத்தில் 9ஆம்தேதி லோக் அதாலத்
திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றங்களில், வரும் 9 ஆம் தேதி 'லோக் அதாலத்' எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.
திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.செல்வசுந்தரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்துார், திருவொற்றியூர், ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு,
மாதவரம், கும்மிடிப்பூண்டி ஆகிய அனைத்து நீதிமன்றங்களிலும், வரும் 9ம் தேதி 'லோக் அதாலத்' எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதில், நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள உரிமையியல், மோட்டார் வாகன விபத்து, குடும்ப நல வழக்கு, காசோலை, குற்றவியல் வழக்குகளில் சமாதானமாக செல்லக்கூடிய வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்படும்.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்க விரும்புவோர், தங்களுக்கு எந்த நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதோ, அந்த மாவட்ட நீதிமன்றம் அல்லது தாலுகா நீதிமன்றத்தை 9ம் தேதிக்கு முன்னதாக அணுகலாம். வங்கி மற்றும் கட்டண நிலுவை சார்ந்த நிலுவையில் அல்லாத வழக்குகள், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, திருவள்ளூர்,
பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்துார், திருவொற்றியூர், ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, மாதவரம், கும்மிடிப்பூண்டி ஆகிய வட்ட சட்டப் பணிகள் குழு அலுவலகத்தில் அமர்வுகள் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.