மக்களை அச்சுறுத்திய 7வயது புலி கூண்டில் சிக்கியது

கேரளாவில் மக்களை அச்சுறுத்திய புலி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Update: 2024-03-14 17:16 GMT

கூண்டில் சிக்கிய புலி

கேரள மாநிலம் வயநாடு தெற்கு வனச்சரகம் மீனங்காடி ஊராட்சி அப்பாட், புல்லு மலை, மயிலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களில் மூன்று கால்நடைகளை புலி தாக்கி கொன்றதாக கூறப்படுகிறது. புலியின் நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர், அதனை கண்காணிக்க இரண்டு இடங்களில் 8 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியிருந்தனர். இந்நிலையில் மைலம்பாடி அருகே உள்ள பாம்பும்கொல்லி என்ற இடத்தில் செத்தலாயத் ரேஞ்ச் அலுவலர் அப்துல் சமது தலைமையிலான வனக் குழுவினர் வைத்த கூண்டில், கடந்த செவ்வாய்கிழமை இரவு 10 மணியளவில் புலி சிக்கியது. பிடிப்பட்ட புலி வயநாடு வனப் பகுதியை வாழ்விடமாக கொண்ட WYS-07 என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், கால்நடைகளை வேட்டையாடிய புலி சுல்தான் பத்தேரியில் உள்ள புலிகளுக்கான நோய்த்தடுப்பு சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதை கால்நடை மருத்துவர் அஜேஷ் மோகன்தாஸ் தலைமையிலான கால்நடை நிபுணர்கள் குழு ஆய்வு செய்தனர். பிடிப்பட்ட புலி அதன் அனைத்து கோரைப் பற்களையும் இழந்துள்ளதால், வனப்பகுதியில் விடுவதற்கு தகுதியற்றதென வனத்துறையினர் தெரிவிக்கிறனர். புலியின் மீது வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை, ஆனால் விலங்கின் உடல்நிலையை தெடர் மருத்துவ கண்காணிப்புக்குப் பின்னரே கண்டறிய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் கோரைப் பற்களை இழந்ததால், புலி எளிதில் இரையைப் பெறுவதற்காக மனித குடியிருப்புக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. புலி பிடிப்பட்டதையடுத்து மீனங்காடி பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News