போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர் மீது வழக்கு

ஏற்காட்டில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-03-24 14:03 GMT

தலைமறைவாக இருக்கும் ஆசிரியர்

சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் ஊராட்சியில் முளுவி கிராமத்தில் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கோரிமேடு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், 1997-ம் ஆண்டு குண்டூர் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்ததாகவும், அதன்பிறகு அவர் வேறு மாவட்டங்களுக்கு செல்லாமல் ஏற்காடு மலை கிராமங்களிலேயே பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ஆசிரியர் வெங்கடேசின் பள்ளி மற்றும் தகுதி சான்றிதழின் உண்மை தன்மை அறிய வேண்டும் என பெற்றோர் தரப்பில் புகார் எழுந்தது. இதுகுறித்து ஏற்காடு வட்டார கல்வி அலுவலர் சேக் தாவூத் என்பவர், ஏற்காடு போலீஸ் நிலையத்தில் தலைமை ஆசிரியர் வெங்கடேஷ் மீது புகார் தெரிவித்துள்ளார்.

அதில், ஏற்காட்டிலேயே 27 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் வெங்கடேஷ் பணிபுரிந்து வருகிறார். அவர் மேல் சந்தேகம் ஏற்பட்டு அவருடைய வேலைக்கான தகுதி சான்றிதழை சென்னையில் உள்ள உண்மை கண்டறியும் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதில், அவருடைய சான்றிதழ் போலி என தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும், என தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்போது தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியர் வெங்கடேசை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News