நான்கு வழிச்சாலை ரூ.68 கோடி மதிப்பில் அமைக்க திட்டம்
திருவாலங்காடில் நான்கு வழிச்சாலை ரூ.68 கோடி மதிப்பில் அமைக்க திட்டம்.
By : King 24x7 Website
Update: 2024-01-09 09:56 GMT
திருவாலங்காடில் முதல்வரின் சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ், 68 கோடி ரூபாய் மதிப்பில் இரு வழிச்சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் துவங்கி உள்ளது. திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்டது அரக்கோணம்-திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை. இச்சாலை, 24 கி.மீ., துாரம் கொண்டது. இச்சாலையில் திருவாலங்காடு சர்க்கரை ஆலை சந்திப்பில் இருந்து அரக்கோணம் வரையிலான, 9 கி.மீ., துாரம், 20 மீட்டர் அகலத்திற்கு, சாலையை முதற்கட்டமாக நான்கு வழிச்சாலையாக மாற்ற கடந்தாண்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஒப்புதல் கிடைத்த நிலையில் கடந்த, 3ம் தேதி திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் நான்கு வழிச்சாலை பணியை துவக்கி வைத்தார். முதல்வரின் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ், 68 கோடி ரூபாய் மதிப்பில், இச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வியாசபுரம், வீரராகவபுரம், பால்வாய், புண்டரீகபுரம், உள்ளிட்ட கிராமங்களில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு மழைநீர் தங்கு தடையின்றி செல்ல, 16 இடங்களில் கல்வெட்டு பாலங்கள், 2 தரைப்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக விபத்து ஏற்படும் என, கண்டறியப்பட்ட பகுதி மற்றும் பள்ளி பகுதி என மூன்று இடங்களில், 500 மீட்டர் நீளத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை அமைப்பதன் வாயிலாக வேலுார், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வோர் நேர விரையம் குறையும். மேலும் பாதுகாப்பாக செல்ல வழிவகுக்கும். அதே போன்று சரக்கு வாகனங்கள் தங்கு தடையின்றி செல்லும். ரவுண்டானா அமையும் இச்சாலையை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியில்லை. நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதனால் பணியில் தொய்வு ஏற்படாது. எனவே முதற்கட்டமாக திருவாலங்காடில் அமைக்கப்படும் சாலை பணியை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். பின் திருவாலங்காடு முதல் திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், இரண்டாம் கட்டமாக சாலை அமைத்து முடிக்கப்படும். திருவாலங்காடு சந்திப்பில் ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது.