திருமழிசையில் பெருகி வரும் பேனர் கலாசாரம்
திருமழிசையில் பேனர் கலாசாரம் பெருகி வருகிறது.
நெடுஞ்சாலையில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், திருமழிசை பகுதியில் பேனர் வைப்பத்தில் அரசியல் கட்சியினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையோரம் விளம்பர பேனர்கள் மீடியன் பகுதியில் கொடிக்கம்பங்கள் வைப்பது தற்போது அதிகரித்துள்ளது.
இதற்கு அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததே காரணம் என, வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் செல்லும் சாலை சந்திப்பு பகுதியில் வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள், கொடிக்கம்பங்களால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
மேலும் இந்த நெடுஞ்சாலையோரம் உள்ள பயணியர் நிழற்குடை, அரசியல் கட்சியினர் விளம்பரமையமாக மாறியுள்ளது.நிகழ்ச்சி முடிந்தும் விளம்பர பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளன. இதேபோல் நெடுஞ்சாலையோர கட்டடங்கள் மீதும் பேனர்கள் வைப்பது அதிகரித்து வருகிறது.
எனவே, நெடுஞ்சாலையோர விளம்பர பேனர்கள், கொடிக்கம்பங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.