தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எரிந்த காட்டு யானைக் கூட்டம்
ஆண்டிப்பட்டியில் தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எரிந்து காட்டு யானைக் கூட்டம் அட்டகாசம் செய்தது.
Update: 2024-05-02 12:34 GMT
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு கிராமத்தில் ஏழுசுனை மலை அடிவாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் முருங்கை, தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் இந்த பகுதியில் உள்ள ஒரு தென்னை தோப்பிற்குள் புகுந்த காட்டு யானைக் கூட்டம் அங்கிருந்த நூற்றுக்கணக்கான மரங்களை சேதப்படுத்தி விட்டு சென்றது. இதனையடுத்து கண்டமனூர் வனச்சரக அதிகாரிகள் சம்பந்தபட்ட தோட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, ஓரிரு நாட்கள் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த காட்டு யானை கூட்டம் தொடர்ந்து அதே மலையடிவார பகுதியில் சுற்றித் திரிந்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறிவந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு கடமலைக்குண்டு பகுதியில் உள்ள மல்லைய சாமி என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைக் கூட்டம் அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு புடுங்கி சாய்த்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளது. இது குறித்து தகவல் கிடைத்ததும் கண்டமனூர் வனச்சரக அதிகாரிகள் சேதமடைந்த தென்னை மரங்களை பார்வையிட்டனர். ஒரே வாரத்தில் இரண்டு முறை காட்டு யானை கூட்டம் தோட்டத்திற்குள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளதால், அந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். மேலும் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை கூட்டம் புகுந்து விடுமோ என்று பொதுமக்களும் பீதி அடைந்துள்ளனர்.