மது போதையில் கீழே விழுந்த ஓட்டல் சர்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கரூர் சுங்ககேட் அருகே மது போதையில் மயங்கி கீழே விழுந்த ஓட்டல் சர்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள நன்னம்பாரா பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் வயது 52. இவர் கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சர்வர் ஆக வேலை பார்த்து வந்தார். இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை. இந்த நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான அவருக்கு,ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயும் இருந்து வந்தது.
இந்நிலையில் ஜூன் 16ஆம் தேதி இரவு 10 மணியளவில் கரூர் சுங்ககேட் ஆதி மாரியம்மன் கோவில் சந்திப்பு அருகே மது போதையில் மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் அறிந்த தாந்தோணி மலை குடித்தெருவை சேர்ந்த ராஜனின் நண்பர் கார்த்திக் வயது 40 என்பவர், ராஜனை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த ராஜனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.