மேட்டூர் அருகே பொட்டனேரியில் ஏரியில் கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி பலி
மேட்டூர் அருகே பொட்டனேரியில் ஏரியில் மீன் பிடிக்க சென்ற கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி பலியானர்.;
சடலம் மீட்பு
சேலம் மாவட்டம் மேட்டூரையடுத்த பொட்டனேரி அருகே அரியங்காட்டு வளவை சேர்ந்தவர் மதி (55). கூலித்தொழிலாளியான இவர் மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரி ஏரியில் மீன் பிடிக்க இன்று காலை வந்துள்ளார். அப்போது ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்று வலையில் மீன் சிக்கி உள்ளதா என பார்க்க சென்றபோது சேற்றில் சிக்கிக்கொண்டார்.
நீண்ட நேரமாகியும் கரை திரும்பாததால், உடன் சென்றவர்கள் மேச்சேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஏரியில் மூழ்கி உயிரிழந்த மதியின் உடலை நீண்ட நேரம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆழமான பகுதியில் சேற்றில் மாட்டிக்கொண்ட மதியின் உடல் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேச்சேரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.