குடியிருப்பு வளாகத்தில் உலா வந்த சிறுத்தை
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் சமீப நாட்களாக உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக சிறுத்தை, கரடிகள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக நடமாடி வருகின்றன. இந்த நிலையில் உதகை - மஞ்சூர் சாலை பெரும்பாலும் வனப்பகுதிகளை கொண்டுள்ளதால் இச்சாலை ஓரங்களில் உள்ள கிராம பகுதிகளில் சமீப நாட்களாக சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது.
இந்நிலையில் காந்திப்பேட்டை என்னும் பகுதியில் பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்கள், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியிலும் சிறுத்தை நடமாடுவதை அப்பகுதி மக்கள் கண்டு வனத்துறையினருக்கு தெரிவித்தனர். பின்பு அந்தப் பகுதியில் வனத்துறையினர் CCTV கேமராவை பொருத்தினர்.
இந்த நிலையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் சிறுத்தை நடமாடிய காட்சிகள் தற்போது பதிவாகியுள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாடுவதை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கண்டுள்ள நிலையில் தற்போது சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்