மூன்று மாதங்களுக்கு பின் கூடிய நகர் மன்ற கூட்டம்
பாராளுமன்ற தேர்தலுக்கு பின் மூன்று மாதங்களுக்கு பிறகு குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த நகரமன்ற கூட்டத்தில் நகராட்சி தலைவர் விஜய் கண்ணன் தலைமை வகித்தார். இதில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு: புருஷோத்தமன், பழனிசாமி (அ.தி.மு.க.): குமாரபாளையம் நகராட்சியுடன், குப்பாண்டபாளையம் ஊராட்சி, தட்டான்குட்டை ஊராட்சி ஆகிய இரு ஊராட்சிகளின் சில பகுதிகளை குமாரபாளையம் நகராட்சியுடன் இணைக்கும் பணி எந்த அளவில் உள்ளது? விஜய்கண்ணன் : (நகர்மன்ற தலைவர்): அதற்கான திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது.
பதில் வந்ததும் மேல் நடவடிக்கை தொடரும். சுமதி (சுயேச்சை ): எங்கள் வார்டில் வடிகாலில் எடுத்த மண் குவியல் அப்படியே உள்ளது. கேட்டால் அதனை எடுக்க ஆள் இல்லை என்கிறார்கள். விஜய்கண்ணன் (நகராட்சி ): வண்டி ஓட்ட ஓட்டுனர்கள் இல்லாத நிலை இருந்தது. தற்போது 6 ஓட்டுனர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தர்மராஜன் (தி.மு.க.) : எங்கள் வார்டில் சர்வீஸ் சாலையோர பழுதை சரி செய்யவும், வடிகால் அமைக்கவும் வேண்டி நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து மறியல் போரட்டம் நடத்த உதவிய நகராட்சி தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. கதிரவன் (தி.மு.க.): எங்கள் வார்டில் உள்ள அங்கன்வாடி பள்ளிக்கு கழிப்பிடம் வேண்டி கேட்டு இருந்தேன்.
அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற அயராது பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. பரிமளம் : (தி.மு.க.) எங்கள் வார்டில் வடிகால் எடுக்க வருவது இல்லை. பல முறை அதிகாரிகள் வசம் சொல்லியும் பலனில்லை. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் வார்டு மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும். விஜய்கண்ணன் (நகராட்சி தலைவர்): எந்த மாதிரி போராட்டம் நடத்த போகிறீர்கள்? சொன்னால் அதற்கு ஏற்றவாறு நானும் தயாராகி விடுவேன். அன்பால் கட்டுப்படுவேன். அதிகாரத்தால் கட்டுப்படுத்த முடியாது. என்னை மிரட்டி பலனில்லை. என் வார்டில் கூடத்தான் வடிகால் தூய்மை படுத்த வருவது இல்லை. ஜேம்ஸ் (தி.மு.க.): குப்பைகள் அள்ளி செல்ல குப்பை வண்டிகள் தயார் செய்ய வேண்டும். இவ்வாறு விவாதங்கள் நடந்தன. நகராட்சி கமிஷனர் குமரன், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.