மோட்டார் சைக்கிள் விபத்து; அரசு பஸ் கண்டக்டர் உயிரிழப்பு
கொல்லங்கோடு அருகே ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில், அரசு பஸ் கண்டக்டர் உயிரிழந்தார்.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள பொற்றைவாரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (59) இவர் குழித்துறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். ஜெயச்சந்திரன் நேற்று மதியம் நடைக்காவு பகுதியிலிருந்து வீட்டுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் இடவார் என்ற பகுதியில் சென்றபோது அவருக்கு முன்னால் சிமெண்ட் கற்கள் ஏற்றிக்கொண்டு சென்ற டெம்போவை முந்தி செல்ல முயற்சித்துள்ளார்.
அப்போது எதிரே அதிவேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஜெயச்சந்திரன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெயச்சந்திரன் மற்றும் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேர் உட்பட மூன்று பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஜெயச்சந்திரன் சிமெண்ட் கற்கள் ஏற்றி வந்த டெம்போவின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி, சாலையில் இழுத்து செல்லப்பட்டு, தலை நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில் மோதிய மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் உடனே அங்கிருந்து தப்பி சென்றனர். கொல்லங்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.