அருவாப்பாடியில் கோயில் விழாவில் சிறப்பு விருந்து உபசரிப்பு
அருவாப்பாடி கிராமத்தில் வரதராஜப்பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற 48ம் ஆண்டு கம்பசேவை திருவிழாவில், விளக்கு கம்பத்திற்கு சிறப்பு பூஜை செய்து, பிரம்மாண்டமான அன்னம் குவியலை பெருமாளாக பாவித்து தீபாராதனை செய்யும் விநோத கம்பவழிபாடு நிகழ்ச்சி, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த அருவாப்பாடி கிராமத்தில் பழைமை வாய்ந்த வரதராஜப்பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் வைகாசி திருவிழா கடந்த 20ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் நடைபெற்று வருகின்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பசேவை திருவிழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு, தீபம் எரியும் கம்பத்திற்கு, பால், தயிர், பன்னீர், இளநீர், திரவியப்பொடி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, விளக்கு ஏற்றப்பட்டு, கோவிந்தா என்ற கோஷத்துடன், தீபம் ஆலயத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதனையடுத்து, 25 மூட்டைகள் கொண்டு சமைக்கப்பட்ட பிரமாண்டமான விருந்து உபசரிப்பு நடைபெற்றது. முன்னதாக சாதம் குவிக்கப்பட்டு அதற்கு நாமங்கள் இட்டு பெருமாள் போல் அலங்கரிக்கப்பட்டது. அன்னக்குவியல் ( சாதம் குவித்து வைக்கப்பட்டு) பெருமாளாக பாவித்து, அதற்கு தீபாராதனை செய்யப்பட்டது.
அதனையடுத்து, அங்கு குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. குழந்தை இல்லாத பெண்கள் மடி பிச்சை ஏந்தி வழிபாடு செய்தனர். இந்த விநோத வழிபாட்டில் பங்கேற்றால், குழந்தைசெல்வம் ஏற்படும், மழை பெய்து, வறட்சி நீங்கும் என்பது ஐதீகமாகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்த திருவிழா 49 வது ஆண்டாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.