பேராவூரணி அருகே மாணவன் தூக்கிட்டு தற்கொலை
தஞ்சாவூர் மாவட்டம், அம்மையாண்டி பகுதியில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள உள்ள அம்மையாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணகுமார். இவர் கோவை அருகே மனைவியுடன் தங்கி குளிர்பானக் கடை நடத்தி வருவதால், இவரது மகன் ஹரிபாலன் (12) பாட்டியுடன் உறவினர் வீட்டில் தங்கி, அம்மையாண்டி அருகே உள்ள ஏனாதிகரம்பை அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
ஹரிபாலன் சுமாராகத் தான் படிப்பாராம். பெற்றோர்களும், உறவினர்களும் பரீட்சை வருவதால் நன்றாக படிக்க வேண்டும் என கூறியுள்ளனர். இந்நிலையில், புதன்கிழமை காலை ஹரிபாலன் வீட்டில் தூக்கிட்டுக் கொண்டார். ஆபத்தான நிலையில் இருந்த ஹரிபாலனை அருகில் உள்ளவர்கள் மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக பலியானார் .
இதுகுறித்து திருச்சிற்றம்பலம் காவல்துறை ஆய்வாளர் சேரன் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தை பார்வையிட்டு மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.