மேலூர் அருகே நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழா
மேலூர் அருகே நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Update: 2024-05-23 12:52 GMT
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாலக்கிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பெரிய நாச்சி அம்மன் கோவில் ஆலயத்தில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை மங்கள இசை முழங்க கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசால பூஜை துவங்கியது. தொடர்ந்து இன்று, காலை நான்காம் யாக கால பூஜை, மற்றும் ஹோம குண்ட பூஜை, பூரணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு காலை 10 மணிக்கு மேல் கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்தில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரம் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது வானில் கருடன் வட்டமிட்டது பக்தர்களிடையே பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து கும்பாபிஷேகம் காண வந்த பக்தர்களுக்கு விழா குழுவினர் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர். இந்த கும்பாபிஷேகத்தை ஒட்டி மேலூர் ,தாமரைப்பட்டி , செட்டியார்பட்டி, லட்சுமிபுரம் தும்பைப்பட்டி மற்றும் கொட்டாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் அருளை பெற்று சென்றனர்.