மாணவர்களுக்கான ஆதார் பதிவு முகாம்
கல்வித்தொகை உள்ளிட்ட அனைத்து திட்டங்களின் பெற ஆதார் முக்கியம் என்பதால் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கான சிறப்பு ஆதார் முகாமினை ஆட்சியர், எம்எல்ஏ துவக்கி வைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 914 பள்ளிகள் நேற்று முதல் இயங்க துவங்கியது.கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நல திட்டங்களை மாணவர்கள் பெற ஆதார் எண் அவசியம். இதில் ஏற்படும் திருத்தங்களை சரி செய்து கொள்ளும் வகையில் ஆதார் முகாம் நடைபெற்றது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் காலை உணவு, மதிய உணவு மற்றும் விலை இல்லா பாடப்புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை இலவசமாக அளித்து வருகிறது. இது மட்டும் இல்லாமல் கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு வங்கி கணக்கு முக்கியம் என்பதால் அதற்கு ஆதார் எண் அவசியம் தேவைப்படுகிறது.
இந்த ஆதார் அட்டை பதிவு செய்தல் மற்றும் சில திருத்தங்கள் மேற்கொள்ள பெற்றோர்கள் உடன் மாணவர்கள் செல்லும் நிலையில் கடும் அலைச்சல் ஏற்படுவதாகவும், இதனைப் போக்க பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளிலே சிறப்பு முகாம் நடத்த பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற பள்ளிக்கல்வித்துறைஇப்பணிக்காக எல்காட் நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளீட்டாளர்களை ஒன்றியங்கள் வாரியாக நியமித்தது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 பேர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று இப்பணி துவக்கும் நிகழ்வு பிள்ளையார்பாளையம் சி.எஸ்.எம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, எம்எல்ஏ ஏழிலரசன் ஆகியோர் பார்வையிட்டு, துவக்கி வைத்தனர்.