ஆதார் பதிவில் அலைக்கழிப்பு - வாடிக்கையாளர்கள் சாலை மறியல்
கிராமங்களில் ஆதார் கைரேகை இணைப்பு முகாமை நடத்தக்கோரி கேஸ் நிறுவனம் முன்பு வாடிக்கையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் செயல்பட்டு வரும் ஆர்.எல்.ஆர் இண்டன் கேஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் வாடிக்கையாளர்களுக்கு மானிய தொகை தவறாமல் கிடைக்கவும், போலி இணைப்புகளை கண்டறியவும் ஆதார் உடன் கைரேகை இணைக்கும் பணி கடந்தசில நாட்களாக நடந்து வருகிறது இச்சூழ்நிலையில் நேற்று அதிகாலை முதல் சுமார் 200 மேற்பட்ட பயனாளிகள் ஊத்தங்கரை கேஸ் அலுவலகம் முன்பு கைரேகை பதிவு செய்ய கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாடிக்கையாளர்களுக்கு குடிநீர், இருக்கை உள்ளிட்ட எந்த ஒரு வசதியும் செய்து கொடுக்காமல் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் ஊத்தங்கரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு இடையில் கேஸ் அலுவலகம் வந்து அவதிப்படுகின்றனர் எனவே சிலிண்டர் டெலிவரி செய்யும் போதோ அல்லது கிராமங்கள் தோறும் முகாம் அமைதோ ஆதார் மற்றும் கைரேகை இணைப்பு முகாமினை வாடிக்கையாளர்களுக்கு இடைஞ்சல் இல்லாதவகையில் நிர்வாகம் சார்பில் நடத்த வேண்டும் என்று கூறி ஊத்தங்கரை வெங்கடதாம்பட்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தகவல் அறிந்து விரைந்து வந்த ஊத்தங்கரை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்தந்த கிராமங்களில் முகாம் அமைக்கப்படும் என உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.