அஞ்சல் அலுவலகங்களில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம்

தூத்துக்குடியில் அஞ்சல் அலுவலகங்களில் ஆண்டுக்கு ரூ.559/-செலுத்தி காப்பீடு வசதி பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2024-03-13 00:49 GMT

விபத்து காப்பீடு

தூத்துக்குடியில் அஞ்சல் அலுவலகங்களில் ஆண்டுக்கு ரூ.559/-செலுத்தி காப்பீடு வசதி பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் மு.பொன்னையா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி கோட்டத்திலுள்ள இந்தியா போஸ்ட்பேமெண்ட்ஸ் வங்கி மூலமாக 18 வயது முதல் 65 வயது வரை உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு ரூ.559/-செலுத்தி ரூ.10 லட்சத்துக்கான விபத்துகாப்பீடு, மற்றும் ரூ. 799/- செலுத்தி ரூ.15 லட்சத்திற்கான விபத்து காப்பீடு பெறும் வசதி அஞ்சல்துறை மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று 13/03/2024 முதல் 15/03/2024 வரை சிறப்பு முகாம் அனைத்து தபால்நிலையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள், வாகனஒட்டுநர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்களும் இந்த விபத்துகாப்பீடு பெற்று பயனடையலாம். தொழில் நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகையான தொழிற்சாலைகள், தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மொத்தமாகவும், இந்தகாப்பீட்டை பெற்றுக்கொள்ளலாம். பணிபுரியும் அலுவலகங்களிலேயே சிறப்பு முகாம் நடத்தி பணியாளர்களுக்கு விபத்து காப்பீடு வசதி ஏற்படுத்தி தரப்படும்.

விண்ணப்பப்படிவம், அடையாள, முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகித பயன்பாடுமின்றி அஞ்சல்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட்போன், விரல்ரேகை பதிவு இயந்திரம் மூலம் உடனடியாக முற்றிலும் டிஜிட்டல்முறையில் இந்தபாலிசி வழங்கப்படும். இந்த திட்டத்தில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள விபத்துகாப்பீடு, விபத்தினால் ஏற்படும் மருத்துவசெலவுகள் (உள்நோயாளிசெலவுகளுக்கு ரூ. 75 ஆயிரம்வரை), விபத்தில் மரணம், ஊனம், பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் கல்விசெலவுகளுக்கு ரூ. 50,000 வரையும், விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாள்களுக்கு தினப்படி தொகை ஒருநாளுக்கு ரூ.1000 வீதம் 60 நாட்களுக்கும், விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினரின் பயணசெலவுகளுக்கு அதிகபட்சம்ரூ. 9ஆயிரம் வரையும், விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் இறுதிச்சடங்குகள் செய்ய ரூ. 7ஆயிரம் வரை வழங்கப்படும்.

இந்த குழு விபத்துகாப்பீட்டு பாலிசியை ஒருவர் எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல்நல நெருக்கடிகளையும், நிதிநெருக்கடி, உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்யமுடியும். இந்தகாப்பீடு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால்நிலையங்களிலும் கிடைக்கும். இதனால் பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள அஞ்சல்நிலையங்கள், அஞ்சல்காரர்கள் மூலம் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்டுள்ளது.

Tags:    

Similar News