அரசு பஸ்சை வழிமறித்து கண்டக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
குலசேகரம் அருகே அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுநர்,நடத்துனருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திங்கள்நகர் அழகன்பாறையை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு (வயது 32). இவர் தக்கலை-பெருஞ்சாணி அரசு பஸ்சில் கண்டக்டராக பணி புரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பஸ் பெருஞ்சாணிக்கு சென்று கொண்டிருக்கும் போது குற்றியாணி பகுதியில் பெருஞ்சாணி ஆலமூடு பகுதியைச் சேர்ந்த டெம்போ டிரைவரான கிறிஸ்டோபர் (35) ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து பஸ்சை வழிமறித்தார். அவர் கண்டக்டர் மணிகண்டபிரபு மற்றும் டிரைவர் ஜான் ஜெஸ்டினையும் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அதே பஸ் பெருஞ்சாணிக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போதும் கிறிஸ்டோபர் பஸ்சை வழி மறித்து மீண்டும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி மணிகண்ட பிரபு குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிறிஸ்டோபரை கைது செய்தனர்.