ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்துவதா? ஈஸ்வரன் கேள்வி..!
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏ.வுமான இ.ஆர். ஈஸ்வரன், நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை திருச்செங்கோட்டில் நடை பயணம் மேற்கொண்ட போது, திருச்செங்கோடு தொகுதியில் எனது செயல்பாடுகள் ஒன்றும் சரி இல்லை எனவும், சட்டசபையில், அமைச்சர் உதயநிதி பற்றி துதி பாடுவது தான் எனது வழக்கம் என்றும் அவர் பேசியுள்ளர்.
ஆதாரத்துடன் அண்ணாமலை பேச வேண்டும். இரண்டு ஆண்டு காலத்தில் சட்டசபையில் நான் அமைச்சர் உதயநிதி பற்றி துதிபாடி பேசியிருந்தால், ஆதாரத்துடன் நிருபிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதியாக உள்ள, எனது செயல்பாடு பற்றி பேசுவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அதை நான் வரவேற்கிறேன்.
ஏதோ குறை சொல்ல வேண்டும் என தவறான தகவல்களை கூறுவது ஒரு கட்சி தலைவருக்கு அழகல்ல. எனது தொகுதிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நான் சட்டசபையில் பேசியுள்ளேன். என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க அண்ணாமலை தயாரா?. எங்கே , எப்போது என ஊடகங்கள் முன்னிலையில் அண்ணாமலை சொல்ல வேண்டும். இல்லையென்றால் நான் பேசியது தவறு என அவர் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.
அண்ணாமலை ஒவ்வொரு முறையும் நடை பயணம் மேற்கொள்ளும் போதும் அப் பகுதியில் உள்ள தொழில் அதிபர்களை சந்திக்காமல் பணக்காரர்களை மட்டும் சந்திப்பது ஏன் என்று தெரியவில்லை. பா.ஜ.க.வினர் 2014 ஆம் ஆண்டு வளர்ச்சி என கூறி விட்டு தேர்தலை சந்தித்தார்கள். கடந்த 10 ஆண்டுகளில் எந்த வளச்சியும் இல்லை.
இப்போது சாதாரண நபர்கள் யாரும் எந்த தொழிலும் துவங்க முடியாத நிலையில் அனைத்து தொழில்களும் நலிவடைந்துவிட்டன. இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க.வினர், தற்போது மதம், ஆன்மிகம் குறித்து பேசுகின்றனர். கவர்னர் வாரம் ஒரு முறை ஒரு கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்துகிறார். அவருடைய கருத்துகளுக்கு கட்சியினரும் பதில் அளிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது நாமக்கல் தெற்கு மாவட்ட கொ.ம.தே.க. தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.