மழையால் பல ஏக்கரில் கரும்பு பயிர்கள் சேதம்; விவசாயிகள் வேதனை!
புதுக்கோட்டை மாவட்டம்: இலங்கைக்கு அருகே வங்க கடலில் உருவான காற்று சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. புதுகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை விட்டுவிட்டு பரவலாக மழை பெய்தது. கடலோர பகுதிகளான மணமேல்குடி, மீமிசல் , நாகுடி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் புதுகையை அடுத்த பெருஞ்சினை, சிறுஞ்சினை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் பெய்த மழையால் பொங்கல் பண்டிகைக்காக பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் சாய்ந்தன.
மழை காலம் என்பதால் கரும்பு பயிர்கள் சாய்ந்து விடாமல் தடுக்க விவசாயிகள் கம்பு வைத்து முட்டு கொடுத்து இருந்தனர். அதையும் மீறி கரும்புகள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். சாய்ந்த கரும்புகளை ஒன்றாக இணைத்து கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கிராமங்களில் சுமார் 20 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் சாய்ந்து விட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் மேலும் எங்கள் பகுதியில் விளைந்த கரும்புகளை பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் கடைகளில் வழங்க அரசை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.