ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம்
கரூர் ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டத்தில் அடிப்படை வசதிகள் சரியான முறையில் கிடைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக, மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், சாக்கடை வசதி, சுடுகாடு மற்றும் சுடுகாட்டு பாதை, எரிமேடை அமைத்தல் போன்றவற்றில் காணப்படும் குறைபாடுகள் சார்ந்த பிரச்சினைகளை ஆதாரத்துடன் தெரிவிப்பது குறித்து விவாதித்தனர்.
மேலும், இரட்டை டம்ளர் முறை, கோவிலுக்கு சம உரிமை வழங்கப்படாமை, செருப்பு அணிய விடாமல் தடுப்பது போன்ற சம்பவங்கள் தொடர்பாக ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும் என ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சண்முகவடிவேல், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சுமத்ராதேவி, நலக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.