லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

தஞ்சாவூர் அருகே விவசாயக் கூலித் தொழிலாளியிடம் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு கும்பகோணம் கோர்ட் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

Update: 2024-01-19 14:28 GMT

பைல் படம்

தஞ்சாவூர் அருகே விவசாயக் கூலித் தொழிலாளியிடம் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு கும்பகோணம் நீதிமன்றம் வியாழக்கிழமை 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரபாபு. விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் கூட்டுப் பட்டாவில் இருந்த தனது நிலத்துக்கு தனிப் பட்டா கோரி 2016 ஆம் ஆண்டில் விண்ணப்பம் செய்தார். அப்போது, கண்டிதம்பட்டு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய சங்கீதா (தற்போதைய வயது 43) தனிப்பட்டா பெயர் மாற்றத்துக்கு பரிந்துரை செய்ய ரூ. 3 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

இது குறித்து தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் பிரிவில் சந்திரபாபு புகார் செய்தார். இதன் பேரில் காவல் பிரிவினர் வழக்குப் பதிந்து சங்கீதாவை லஞ்சம் வாங்கியபோது பிடித்து கைது செய்தனர். இது தொடர்பாக கும்பகோணம் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி டி. சண்முகப்ரியா விசாரித்து சங்கீதாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 8 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். இந்த வழக்கை திறம்பட நடத்திய அரசு வழக்குரைஞர் எஸ். முகமது இஸ்மாயில், காவல் ஆய்வாளர் எம். சரவணன், சிறப்பு உதவி ஆய்வாளர் சி. அய்யப்பன் ஆகியோரை காவல் துறை உயர் அலுவலர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News