அதிமுக வேட்பாளரின் பொய்யான வாக்குறுதி - திமுக எம்எல்ஏ
அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகிறார்' என தி.மு.க., எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் பேசினார்.
தியாகதுருகம் ஒன்றிய கிராமங்களில் தி.மு.க., வேட்பாளர் மலையரசனை ஆதரித்து, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பிரசாரம் மேற்கொண்டார். தொகுதி பொறுப்பாளர் மாசிலாமணி, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன் தாமோதரன், வி.சி., மாவட்ட செயலாளர் மதியழகன் முன்னிலை வகித்தனர்.
வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு பேசுகையில், 'திராவிட மாடல் ஆட்சியில் கிராமங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகிறார். கள்ளக்குறிச்சி நகரைச்சுற்றி ரிங் ரோடு அமைத்து தருவேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால், இத்திட்டத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சாலை அமைப்பதற்கான நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதுகூட தெரியாமல் ரிங் ரோடு அமைத்து தருவேன் என்று மக்களை ஏமாற்றுகிறார். தி.மு.க., வேட்பாளர் மலையரசன் எளிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவர், மக்களின் பிரச்னைகளை நன்கறிந்து டில்லி வரை கொண்டு சென்று நல்ல திட்டங்களை செயல்படுத்துவார்.