அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு பொதுமக்களிடம் கருத்து கேட்பு

சேலத்தில் நடந்த அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2024-02-08 01:43 GMT

கருத்து கேட்பு கூட்டம் 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நேற்று மாலை சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர்.

இதற்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், தங்கமணி, கே.பி.அன்பழகன், பொள்ளாச்சி ஜெயராமன், உதயகுமார், வைகை செல்வன், சரோஜா, வளர்மதி, பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்கள், வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழுவினர், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் கைத்தறி மட்டும் பட்டு நெசவாளர்கள் சங்கத்தினர் உள்பட பலரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையானது அனைத்து மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதற்காக அமைக்கப்பட்ட குழுவினர் நேரடியாக அனைத்து தரப்பினரையும் சந்தித்து கோரிக்கைகளை கேட்டு வருகிறோம். மக்களிடம் பொய் கூறி ஏமாற்றுவது அ.தி.மு.க.வின் வழக்கம் அல்ல. தேர்தல் அறிக்கையில் என்ன கொடுக்கிறமோ? அதை எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் வலியுறுத்துவார். தி.மு.க. தேர்தல் அறிக்கை நம்பியார், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை எம்.ஜி.ஆர். ஆகும் இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம், புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ., உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News