அ.தி.மு.க., நிர்வாகி மகன் வெட்டி கொலை
காரைப்பேட்டை அருகே அதிமுக நிர்வாகி மகன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-01-10 05:07 GMT
ஆனந்த்,
காஞ்சிபுரம் அடுத்த காரைப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜேக்கப்; அ.தி.மு.க.,வில் கிளை செயலராக உள்ளார். இவருக்கு மூன்று மகன்கள். இதில், மூத்த மகனான ஆனந்த், 31. பட்டப்படிப்பு முடித்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வாகன உரிமம், எப்.சி., புதுப்பித்தல் உள்ளிட்ட வேலைகளை 'கமிஷன்' அடிப்படையில் செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆனந்துக்கு, மொபைல் போன் அழைப்பு வந்துள்ளது. உடனடியாக, வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அதன்பின், நேற்று காலை வரை வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், காரைப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே துரித உணவகத்தின் முன், ஆனந்த் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் மது அருந்தியதற்கான தடயங்கள் இருந்ததால், மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்."