காலை உணவு திட்ட செயல்பாடுகளை தினமும் கண்காணிக்க அறிவுரை
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக பெருந்திட்ட வளாத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மற்றும் வாழ்ந்துகாட்டுவோம் திட்ட களப்பணியாளர்களுக்கு திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மற்றும் வாழ்ந்துகாட்டுவோம் திட்ட களப்பணியாளர்களுக்கு திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரால் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் இணைப்பு குறித்தும், தீன் தயாள் உபாத்யாயா கிராம கௌசல்யா யோஜனா (DDU-GKY) திட்டத்தில் படித்து வேலை வாய்ப்பு அற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து ஆய்வு செய்தார். கடன் இணைப்பு வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.1594 கோடியில் ரூ.1355 கோடி எய்தப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்.
மேலும், 2023-24 ம் ஆண்டிற்கான இலக்கினை வரும் டிசம்பர் 2023 க்குள் முடித்திட வேண்டுமென அறிவுறுத்தினார். DDU GKY திட்டத்தின் ஊரகப்பகுதி இளைஞர்களை பயிற்சி நிறுவனங்களில் சேர்க்க களப்பணியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு டிசம்பர் மாதத்திற்குள் இலக்கினை முடிக்க அறிவுறுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் காலை உணவு திட்டம் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இத்திட்டத்தினை தினந்தோறும் தொடர்ந்து கண்காணிக்க அனைத்து களப்பணியாளர்களுக்கும் அறிவுரை வழங்கினார். மேலும் வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் இணைப்பினை 100% முடித்திடவும் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பா.அ.ஸையித் சுலைமான், வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன், அனைத்து உதவி திட்ட அலுவலர்கள், அனைத்து களப்பணியாளர்கள் மற்றும் நகர்ப்புற அனைத்து சமுதாய அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.