மோட்டார் சைக்கிள் விபத்தில் வக்கீல் உயிரிழப்பு !
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வக்கீல் பரிதாபமாக உயிரிழந்தார்.
By : King 24x7 Angel
Update: 2024-03-13 10:22 GMT
கன்னியாகுமரிமாவட்டம் திருவட்டார் அருகே உள்ள செங்கோடியை சேர்ந்தவர் மதன்லால் (33) இவர் தக்கலையில் வக்கீலாக உள்ளார். நேற்று மோட்டார் சைக்கிளில் குளச்சல் அருகேயுள்ள லட்சுமிபுரம் பகுதிக்கு சென்றார். பின்னர் இரவு 11 ;30 மணி அளவில் அவர் நண்பர்கள் இருவருடன் மீண்டும் ஊருக்கு புறப்பட்டார். மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். கல்லுக்கூட்டம் சந்திப்பில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்துள்ளது. அதிலும் மூன்று பேர் வந்துள்ளனர். எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மதன்லால் பலத்த காயமடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மதன்லால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மதன்லாலுக்கு மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.