11 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற நாட்டுப்படகு மீனவர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் 11 நாட்களுக்கு பிறகு நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதனால் மீன்கள் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வந்தது. அதே நேரத்தில் வங்கக்கடலில் பலத்த காற்று எச்சரிக்கை மற்றும் ‘ரெமால்’ புயல் காரணமாக கடந்த 17-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் காரணமாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லாமல் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக மீன்கள் வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதோடு, அதன் விலையும் உயரத் தொடங்கியது. அதே நேரத்தில் குளங்களில் வளர்க்கப்பட்டு வரும் மீன்கள் சந்தைகளில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. அதே சமயத்தில் கோழி இறைச்சியும் விலை தாறுமாறாக உயரத் தொடங்கியது.
ஒரு கிலோ ரூ.280 வரை விற்பனையானது. புயல் கரையை கடந்து விட்டதால், வானிலை இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கி இருக்கிறது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள், நேற்று காலையில் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர். இதேபோல் நெல்லை மாவட்டத்தில் உவரி, கூடுதாழை, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், ேதாமையார்புரம் உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்களும் நேற்று காலையில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். சுமார் 11 நாட்களுக்கு பிறகு நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றதால் மீன்கள் அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மீன்கள் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.