N.கொசவம்பட்டி பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் N.கொசவம்பட்டி பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு.

Update: 2024-02-27 12:32 GMT

மனு

நாமக்கல் - துறையூர் சாலை, N.கொசவம்பட்டி பகுதியில், பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். கொசவம்பட்டி பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள், நாமக்கல் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது.... நாமக்கல் நகராட்சியில் N.கொசவம்பட்டி ஊராட்சி புதிதாக சேர்க்கப்பட்டது. இங்குள்ள பாரதிநகர், சத்யா நகர், பொன்விழா நகர், ஜெய் நகர், இந்திரா நகர், ஆண்டவர் நகர், கவரா நகர், செட்டியார் தெரு உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். ஏற்கனவே, இப்பகுதியில் நகராட்சியில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. ஆண்டுக்கணக்கில் கொட்டப்படும் குப்பைகள் மலைபோல் தேங்கியிருப்பதால் அதில் இருந்து வெளியேறும் கழிவுகள் நிலத்தில் இறங்கி நிலத்தடி நீரை பாதிக்கச் செய்கிறது. தவிர, கோடை காலங்களில் தீ விபத்துகளும் ஏற்பட்டு காற்று மாசடை செய்துகிறது. தொடர் போராட்டத்திற்குப் பின் நகராட்சி மூலம் குப்பைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்த நிலையில், கடந்த 24ம் தேதி குப்பைக் கிடங்கின் நடுவே பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்போவதாக அடிக்கல் நாட்டியுள்ளனர். இதுபற்றி எந்த முன்னறிவிப்புமின்றி செயல்படுத்தியுள்ளனர். ஏற்கனவே மலைபோல் குவிக்கப்பட்ட குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதால் சுகாதார சீர்கேடு மேலும் அதிகரிக்கும். எனவே இந்த திட்டத்தை அமைப்பதை கைவிட்டு எங்கள் பகுதியில் பூங்கா அமைத்து அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
Tags:    

Similar News