காணை நெல் வயல்களில் வேளாண் அதிகாரி ஆய்வு
காணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் நெல் வயல்களில் மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குனர் பெரியசாமி ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் காணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குனர் பெரியசாமி ஆய்வு செய்தார். அப்போது தேசிய ஊட்டச்சத்து இயக்கத் தின் கீழ் சிறு தானிய செயல் விளக்கத்திடல் மற்றும் இடுப்பொருட்களை பார்வையிட்டார். பின்னர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் விசைத்தறிப்பான்களை வழங்கினார்.
அதை தொடர்ந்து, காணை ஒன்றியத்திற்கு உட்பட்ட குப்பம் உளுந்து விதை பண்ணை, பெரும்பாக்கத்தில் வேளாண் துறை சார்பில் உள்ள நெல் வயல்களில் வைக்கப்பட்டுள்ள நிரந்தர பூச்சி நோய் கண்காணிப்பு திடலையும் அவர் ஆய்வு செய்தார்.மேலும் விவசாயிகளிடம் பயிர் நடவு முதல் அறுவடை வரையிலான பூச்சி, நோய் கண்காணிப்பின் முக்கியத்துவம் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை ஆகியவை குறித்து விளக்கி பேசினார். ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தி, வேளாண்மை அலுவலர் சரவணன். உதவி அலுவலர்கள் பிரபாகரன், மணிவண்ணன், ஆத்மா, பணியாளர்கள் சிவானந்தம், சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.