சர்வதேச விதை தினம் விழிப்புணர்வு ஏற்படுத்திய வேளாண் மாணவிகள்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூரில் அமைந்துள்ள வேளாண் கல்வி நிறுவனத்தில் சர்வதேச விதை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விதைக்கண்காட்சி நடத்திய வேளாண் கல்லூரி மாணவிகள்.
Update: 2024-04-27 06:07 GMT
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூரில் அமைந்துள்ள வேளாண் கல்வி நிறுவனத்தில் சர்வதேச விதை தினம் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு ஊரக வேளாண் பணி அனுபவத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் மற்றும் அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விதைக்கண்காட்சி நடத்தினார்.இதில் இருபதிற்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் இரகங்கள் மற்றும் அதன் மதிப்புக் கூட்டுப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு அதன் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள் எடுத்துரைக்கப்பட்டதோடு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட சமீபத்திய பயறு வகைகள் மற்றும் சிறுதானிய வகைகளின் விதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.மேலும், சிறந்த விதைகளை தேர்ந்தெடுக்கும் தேர்வு முறைக்கான செயல்முறை விளக்கம்,உயிரி உரங்களின் மூலம் விதை மேம்படுத்தல் முறை,விதைச்சான்றிதல் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் நவீன விதைப்பு இயந்திரங்களின் செயல்பாட்டு முறைகள் பற்றியும் வேளாண் மாணவிகள் விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.