சாலையை ஆக்கிரமித்து அதிமுக கூட்டம் - பக்தர்கள் அவதி
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு செல்லும் சாலையை வழிமறித்து அதிமுக கூட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் விழாவையொட்டி, அ.தி.மு.க., சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, காஞ்சிபுரம்மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் நேற்று நடந்தது. இதையொட்டி ஏகாம்பரநாதர் கோவிலுக்கு செல்லும் பிரதான சன்னிதி தெரு, நுழைவாயில் பகுதியில், சாலையை மறித்து விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு, சாலையின் இருபுறமும் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
போக்குவரத்துக்கு இடையூறாக பிரதான சாலையில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம் மற்றும்நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. நேற்று காலை ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், கோவிலுக்கு செல்ல வழி இல்லாததால் சிரமத்திற்கு ஆளாகினர். அதேபோல கோவிலை சுற்றியுள்ள பகுதியில் குடியிருப்பவர்களும் தங்களது வீடுகளுக்கு செல்ல வழி இல்லாததால், தேரடி தெரு வழியாக சுற்றிக் கொண்டு சென்றனர். ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில், அரசியல் கட்சியினர் கூட்டம் நடத்தும்போது, பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் போக்குவரத்துக்கு வழியைவிட்டு, விழா மேடை, பந்தல் அமைக்க வேண்டும். இதை காவல் துறையினரும் கண்காணிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.