திமுக அரசை கண்டித்து அதிமுக தெருமுனை பிரச்சாரம்
காங்கேயம் அருகே ஆண்டிபுதூரில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
காங்கேயம் சட்டமன்ற தொகுதி, எல்லபாளையம் புதூர் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிபுதூரில் அஇஅதிமுக கட்சியின் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு குண்டடம் வடக்கு அஇஅதிமுக ஒன்றிய கழகச் செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட பொருளாளர் கிஷோர்குமார் முன்னிலை வகித்தார். விழாவின் துவக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவறுவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர் கட்சி கொடி ஏற்றி கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து துவங்கிய தெருமுனை பிரச்சாரத்தில் பேசிய குண்டடம் வடக்கு ஒன்றிய செயலாளர் சண்முகசுந்தரம் மற்றும் திருப்பூர் மாவட்ட பொருளாளர் கிஷோர்குமார் ஆகியோர் தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு குறித்தும், தற்போது உள்ள ஆட்சியில் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவதாகவும், மின்சாரம் மற்றும் சொத்து வரி விதிப்பு அதிகமாகி உள்ளது எனவும், அஇஅதிமுக ஆட்சியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் பெண்கள், திருமணமாக கூடிய பெண்கள், முதியோர் ஆகியவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச திட்டங்கள் குறித்தும் அதனால் ஏற்பட்ட பயன்கள் குறித்தும், தேவையற்ற தொழில் முதலீடுகள் மற்றும் அதற்கு செலவிடப்படும் கோடிக் கணக்கான பணம் குறித்தும், மேலும் 500க்கும் மேற்பட்ட நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள் பற்றியும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அஇஅதிமுகவை அனைத்து இடங்களிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் பேசினார்.
இதனை அடுத்து பேசிய அஇஅதிமுக கட்சி பேச்சாளர் பாலசுந்தரி தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்தது குறித்தும், மற்றும் வாழ்வாதாரம் பாதித்ததாகவும், அஇஅதிமுக ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கான சலுகைகள், அரசு சார்ந்த வாழ்க்கை மேம்பாட்டு திட்டங்கள், கிராம மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, பொதுமக்கள் வாழ்வாதாராம் போன்ற எண்ணிலடங்காத சேவைகளை செய்தது குறித்து சுட்டிக்காட்டி, எனவே அதிமுக கட்சிக்கு வாக்களிக்க வேண்டும், கட்சியை அனைத்து இடங்களிலும் வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும், மேலும் ஆளுங்கட்சி செயல்பாடுகளை குறித்து எதிர்ப்பு தெரிவித்தும் பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் பூபதி, வடசின்னாரி பாளையம் தலைவர் மகேஷ்வரி பிரகாஷ், முன்னாள் தலைவர்கள் சண்முகம், கந்தசாமி உட்பட அதிமுக நிர்வாகிகள் சாமிநாதன், சின்னசாமி, பத்மநாபன், கவுன்சிலர்கள் புங்கந்துறை அர்ஜுனன், கார்த்திகேயன், மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.