சேலத்தில் கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
சேலத்தில் கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வலியுறுத்தி அகில இந்திய கட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்;
Update: 2024-02-28 01:38 GMT
அகில இந்திய கட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய கட்டுனர் சங்கம் சேலம் மையம், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு, சேலம் சிவில் என்ஜினீயர் அசோசியேசன், சிவில் என்ஜினீயர் அசோசியேசன் (மேற்கு), கட்டிட மேஸ்திரிகள் சங்கம் ஆகியவை இணைந்து சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டுனர் சங்க சேலம் மைய தலைவர் சிவபெருமாள் தலைமை தாங்கினார். கட்டுமான பொருட்களான ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலையை குறைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் கருணாநிதி, கட்டுனர் சங்க துணை தலைவர் துரைசாமி, பொருளாளர் பொன்னம் பூசாரி, ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல், இணை செயலாளர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது நிர்வாகிகள் கூறுகையில், கடந்த 6 மாதத்தில் கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதாவது, 1 யூனிட் எம்.சாண்ட் ரூ.2,800-ல் இருந்து ரூ.4 ஆயிரமாகவும், பி.சாண்ட் 1 யூனிட் ரூ.3,300-ல் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், 1 யூனிட் 1½ இன்ச் ஜல்லி ரூ.1,650-ல் இருந்து ரூ.3 ஆயிரமாகவும், 1 யூனிட் ¾ இன்ச் ஜல்லி ரூ.1,850-ல் இருந்து ரூ.3 ஆயிரமாகவும், 1 யூனிட் ½ இன்ச் ஜல்லி ரூ.1,600 முதல் ரூ.3 ஆயிரமாகவும், 1 யூனிட் பவுடர் ரூ.1,600-ல் இருந்து ரூ.3 ஆயிரமாகவும், 1 யூனிட் கிரஷர் மண் ரூ.1,000-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.