முன்னாள் மாணவர்கள் சந்திப்பு - பசுமை நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்
முன்னாள் மாணவர்கள் 45 ஆண்டுகளுக்குப் பின் சந்திப்பு - பசுமை நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 வகுப்பு முதல் பேட்ச்சில் படித்த முன்னாள் மாணவர்கள் 45 ஆண்டுகளுக்குப்பிறகு சந்தித்து தங்களின் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். தமிழகம் முழுவதும் பள்ளிகளில், கடந்த 1978ம் ஆண்டு, 11ம் வகுப்பு முடித்து பியுசி படிக்கும் முறை ஒழிக்கப்பட்டு, 10ம் வகுப்புக்கு பிறகு +2 படிப்பு முறை கொண்டு வரப்பட்டுது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பியில் பிளஸ் 2 படிப்பு முதல் பேட்ச் கடந்த 1978 முதல் 1980ம் ஆண்டு வரை நடைபெற்றது. அப்போது பிளஸ் 2 முதல் பேட்ச்சில் படித்த, முன்னாள் மாணவர்கள் 45 ஆண்டுகளுக்குப்பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நாமக்கல்லில் நடைபெற்றது. நாமக்கல் தெற்கு மேல்நிலைப்பள்ளியில் படித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல்துறை, கோவை வேளாண் பல்கலை, குடிநீர் வாரியம், சார்பதிவாளர் அலுவலகம், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் டாக்டர் பணி, ஆசிரியர் பணி உள்ளிட்ட முக்கிய அரசு பதவிகளில் பணியாற்றி வந்தவர்கள் தற்போது 60 ஆண்டு வயதைக் கடந்ததால் ஓய்வுபெற்றுள்ளனர். அவர்களின் சேவையைப் பாராட்டி நிகழ்ச்சியில் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. மேலும் பலர், தனியார் பள்ளி நிர்வாகிகள். தனியார் கம்பெனி உரிமையாளர்கள், லாரி, கோழிப்பண்ணை, நகைக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட தொழிலதிபர்களாகவும் உள்ளனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சந்தித்து தங்களின் பசுமையான நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.
ஒவ்வொருவரும் தங்கள் குடும்பம், குழந்தைகள், அவர்களின் படிப்பு உள்ளிட்டவை குறித்தும், பள்ளியில் படிக்கும் போது நடந்த சுவையான அனுபவங்கள் குறித்தும், மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டனர். சுமார் 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். அனைவருக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் என்.சுப்பிரமணியன், செயலாளர் கே.சுப்பிரமணியன், பொருளாளர் பாண்டுரங்கள் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.