பள்ளப்பட்டியில் முன்னாள் அமைச்சர் பெயரில் ஏல சீட்டுமோசடி செய்ய முயற்சி

பள்ளப்பட்டியில் முன்னாள் அமைச்சர் பெயரில் ஏல சீட்டுமோசடி செய்ய முயற்சி செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-03 17:00 GMT

கைது செய்யப்பட்டவர் 

திருச்சி மாவட்டம் வையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி பகுதியில் எம் ஆர் வி என்ற பெயரில் ஏல சீட்டு நிறுவனம் நடத்த இன்று திறப்பு விழா செய்தார்.

தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும் ,கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம். ஆர்.விஜயபாஸ்கரை எம்.ஆர்.வி என அழைப்பது வழக்கம். அவரது பெயரிலேயே இந்த ஏல சீட்டு நிறுவனம் துவக்கியதால், அதிமுகவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அதிமுகவினர் அளித்த புகாரின் பேரில், திறக்கப்பட்ட ஏல சீட்டு நிறுவனத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம்,வேடசந்தூர் பகுதியில் இதேபோன்று ஒரு ஏல சீட்டு நிறுவனத்தை இன்று தொடங்கியுள்ளார் என தெரிய வந்துள்ளது. ராஜ்குமார் செய்தியாளரிடம் தெரிவிக்கும்போது, தான் துவங்கி உள்ள எம்ஆர்வி நிறுவனத்திற்கு லைசென்ஸ் பெற விண்ணப்பித்துள்ளதாகவும், லைசன்ஸ் பெறாமல் நிறுவனத்தை துவக்கியது தவறுதான் எனவும், என்னுடைய நிறுவனத்திற்கும், முன்னாள் அமைச்சருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

ஆயினும், காவல்துறையினர் ராஜகுமாரை கைது செய்து, ஏல சீட்டு நடத்த பயன்படுத்திய நோட்டு மற்றும் விளம்பர நோட்டீஸ் அனைத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். முன்னாள் அமைச்சர் பெயரை பயன்படுத்தி பள்ளப்பட்டி பகுதியில் மோசடியில் ஈடுபட முயன்றதாக கூறப்பட்ட புகாரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News