சேலம் மாநகராட்சி வருவாய் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சேலம் மாநகராட்சி வருவாய் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

Update: 2023-12-30 09:21 GMT

சேலம் மாநகராட்சி

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு குறித்து சேலம் மாநகராட்சி வருவாய் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல அலுவலக உதவி வருவாய் அலுவலர் தமிழ்மணி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது.

அதன்பேரில் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:- மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் தமிழ்மணி மீது புகார் வந்தது.

அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தமிழ்மணி, அவரது மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடத்தி உள்ளோம்.

இதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. மேலும் அவரது வங்கி கணக்கு மற்றும் லாக்கரில் கோர்ட்டு உத்தரவுப்படி சோதனை நடத்த முடிவு செய்து உள்ளோம். அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News