பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்.
பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இளம் சாதனையாளருக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலுார் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. 2023-2024 ஆம் ஆண்டிற்கு scholarship.gov.in என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த 3093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான பெற்றோரது உச்சகட்ட வருமான வரம்பு ரூ.2.5 இலட்சம் ஆகும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க டிசம்பர் 31ம் தேதி கடைசி நாளாகும். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க 2024 ஜனவரி 15ம் தேதி கடைசி நாளாகும். இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் முறையே 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவி தொகையானது வழங்கப்படும். எனவே 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் மாணவ மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் New Registration என்ற இணைப்பில் பதிவு செய்து இத்திட்டத்தின்கீழ் பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட scholarships.gov.in மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை socialjustice.gov.in என்ற இணைதளத்தில் அணுகி கல்வி உதவித்தொகை பயன்களை பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தெரிவித்துள்ளார்.