பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நுண்பார்வையாளர்கள் நியமனம்

சேலம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-11 06:20 GMT

நுண் பார்வையாளர்கள் நியமனம்

தேர்தல் நுண்பார்வையாளர்கள் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு தேர்தல் பொதுப் பார்வையாளர் ஜி.பி. பாட்டீல், முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள், அதனைக் கையாளுதல், சீலிடும் முறை, தேர்தலுக்கு முந்தைய நாள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து நுண் பார்வையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. 14 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சேலம் மாநகரில் 82 மாவட்டத்தில் 48 உள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் 235 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 15 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள 250 பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க வங்கியாளர்கள், காப்பீட்டு நிறுவனப் பணியாளர்கள் மற்றும் தபால் துறை அலுவலர்கள் நிலையில் 300 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கணினி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளில் இத்தேர்தல் நுண் பார்வையாளர்கள் பணிபுரிய உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News