வேட்புமனு தாக்கலின் போது அதிமுக - திமுக இடையே வாக்குவாதம்.

சென்னை வடக்கு நாடாளுமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதில் திமுக மற்றும் அதிமுக கட்சியினர் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. பாஜகவினரும் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-26 01:22 GMT

சென்னை வடக்கு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் பேசின் பிரிட்ஜ் சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று  காலை வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள திமுக, அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் அடுத்தடுத்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய அதிமுகவினர் காத்துக் கொண்டிருந்தபோது திமுகவினர் தாங்கள் முதலில் டோக்கன் பெற்றதாக கூறி முதலில் வேட்பு மனு தாக்கல் செய்ய முயற்சித்தனர்.

இரு கட்சியினரையும் ஒரே நேரத்தில் தேர்தல் அலுவலர் அறைக்குள் அனுமதித்ததால் திமுக மற்றும் அதிமுக சார்ந்த இரு கட்சியினரும் தாங்கள் தான் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அங்கு பரபரப்பு நீடித்தது. அதே நேரத்தில் பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் தேர்தல் அலுவலர் அறைக்கு வெளியே இந்த வாக்குவாதத்தால் இரண்டு மணி நேரமாக காத்துக் கொண்டிருந்தார், இதனால் கோபமடைந்த பாஜகவினர் திமுக அதிமுகவினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

திமுக சார்பில் வாங்கப்பட்ட டோக்கன் 2 ஆம் எண் என்றாலும், அதிமுக சார்பில் வேட்பாளர் உடன் வந்து பெறப்பட்டதால் டோக்கன் எண் 7 என்றாலும் அவருக்கு தான் முன்னுரிமை என வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி கட்டா ரவி தேஜா முதன்மை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உடன் ஆலோசித்து தெரிவித்தார். அதனால் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உடன் சென்று வடசென்னை தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Tags:    

Similar News