பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது
அஞ்சுகிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே பால்குளம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக அஞ்சுகிராமம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீஸ் நிலைய பொறுப்பு உதவி ஆய்வாளர் மகேஷ் தலைமையிலான போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது லட்சுமிபுரத்தை சேர்ந்த சுடர் (22), சிவானந்தன் (34) மற்றும் மந்தாரம்பூதிரை சேர்ந்த முஜிப் ரகுமான் (21) ஆகியோர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அந்தப் பையில் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலம் மற்றும் அதனை எடை போட்டு கொடுப்பதற்காக வைத்திருந்த சிறிய எடை மெஷின் போன்றவை கைப்பற்றப்பட்டன. போலீசார் அவர்கள் மூன்று பேரை கைது செய்ததோடு, கஞ்சா பொட்டலம், எடை மெஷின், ரொக்க பணம் 950 ரூபாயையும் மற்றும் இருசக்கர வாகனம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.