சேலத்திற்கு 10 கம்பெனி துணை ராணுவ படை வருகை
சேலத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 10 கம்பெனி துணை ராணுவ படை வருகை தந்தனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகத்துக்கு துணை ராணுவத்தினர் வந்து கொண்டிருக்கின்றனர். அதன்படி ஏற்கனவே சேலம் மாவட்டத்திற்கு 98 பேர் கொண்ட ஒரு கம்பெனி துணை ராணுவ படையினர் வந்துள்ளனர்.
இவர்கள் அதிகாரிகளுடன் இணைந்து வாகன சோதனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஜார்கண்ட்மாநிலத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் துணை ராணுவத்தினர் நேற்று இரவு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். மொத்தம் 10 கம்பெனி துணை ராணுவ படை வந்துள்ளது. ஒவ்வொரு கம்பெனியிலும் 78 பேர் உள்ளனர். இதில் சேலம் மாநகர் மற்றும் புறநகருக்கு தலா 3 கம்பெனி ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தர்மபுரிக்கு 2 கம்பெனிகளும், கிருஷ்ணகிரி, நாமக்கலுக்கு தலா ஒரு கம்பெனி துணை ராணுவ படையும் வந்துள்ளது. இவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு போலீஸ் வாகனம் மூலம் புறப்பட்டு செல்கின்றனர். மேலும் இவர்கள் விரைவில் அதிகாரிகளுடன் இணைந்து வாகன சோதனை உள்ளிட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.