பெண் மீது தாக்குதல் - ரவுடிக்கு 6 ஆண்டு சிறை
குளச்சல் அருகே பெண்ணை தாக்கிய வழக்கில் ரவுடிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இரணியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மேரி ஸ்டெல்லா பாய் (51). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ஆசீர் நேசராஜன் (60) கடந்த 30- 9_ 2008 அன்று மேரி ஸ்டெல்லாவின் வீடு புகுந்து தகாத வார்த்தைகளால் திட்டி, அவரது வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மேரி ஸ்டெல்லா ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசீர் நேசராஜனை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை 16 வருடங்களாக இரணியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் அமீர்தின் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் நேசராஜனுக்கு ஆறாண்டு சிறை தண்டனை , 15 ஆயிரம் அபராதம் வைத்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் ஏற்கனவே ஆசிர்நேசராஜன் ஏழு மாதங்கள் சிறையில் இருந்ததால் அந்த ஏழு மாதங்கள் கழித்து மீதி நாட்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறியுள்ளார். ஆசிர் நேச ராஜன் மீது ஏற்கனவே குளச்சல் போலீஸ் நிலையத்தில் 21 வழக்குகள் உள்ளதாக சரித்திர பதிவேட்டில் உள்ளது.