குன்னூரில் ஆட்டோ ஓட்டுனர் கைது
குன்னூரில் மாமியாரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அடுத்த சோலாடாமட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், இவருடைய மனைவி வனிதாதேவி,50. இவர்களுடைய இரண்டாவது மகள் தீபிகா அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் நாகராஜ் என்பவரை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நாகராஜுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி தம்பதியிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் தம்பதியிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டதால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தீபிகா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து காதல் மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்ற விரக்தியில் நாகராஜ், தீபிகா வீட்டிற்கு சென்று குழந்தைகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று கூறி, தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. தகராறில் தீபிகாவின் தாயாரின் கையை கத்தியால் கிழித்தில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
தகராரை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்ததால் நாகராஜ் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து வனிதா தேவிக்கு குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மேல்குன்னூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுனர் நாகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.