அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேர் திருவிழா
அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள பழம்பெருமை வாய்ந்த பெருங்கருணை நாயகியாக உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகும். சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற தலமான, இக்கோயிலில் முதலை உண்ட பாலகனை மீட்டெடுத்த தலமான இக்கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். சித்திரை திருவிழா முதல் நிகழ்வாக கோயிலில் கடந்த 14ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 15ம் தேதி சூரிய சந்திர மண்டல காட்சிகளும், 16ம் தேதி அதிகார நந்தி, கிளி, பூதம் அன்ன வாகன காட்சிகளும், 17ம் தேதி புஷ்ப பல்லக்கு, கைலாச வாகன காட்சிகளும் நடைபெற்றது. நேற்றைய தினம் கருணாம்பிகை உடனமர் அவிநாசி அப்பர் திருத்தேரில் எழுந்தருளிய நிலையில் இன்று தேர் திருவிழா நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் நமச்சிவாயா கோஷம் முழங்க , சிவதாளங்கள் வாசிக்க தேர் வடம் பிடித்து இழக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் நடைபெறும் தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு நிறைவடைந்த பின்பு வருகின்ற 23ம் தேதி அம்மன் தேர் இழுக்கப்படுகிறது.இன்று நடைபெற்ற தேரோடாட்டில் அவிநாசி,திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டனர். தேரோட்டம் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு நடைபெறும்போது தேர் வலம் வரும் வீதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
தேர் திருவிழாவினை முன்னிட்டு திருப்பூரில் இருந்து கோவை செல்லும் மற்றும் கோவையில் இருந்து திருப்பூர் வரும் சாலைகளில் காவல்துறையினர் தற்காலிக மாற்றம் செய்து 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்ட தேர் மேற்கு ரத வீதியில் நிலை நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் நாளை காலை தேர் வடம் பிடித்து இழுத்து கோவிலுக்கு அருகில் உள்ள தேர் நிலைக்கு கொண்டு வரப்பட உள்ளது.