கடற்கரையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு
கடற்கரையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.;
Update: 2024-03-30 05:05 GMT
விழிப்புணர்வு
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூா் ஒன்றியம், கோவளம் ஊராட்சி நீலகொடி கடற்கரையில் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாா்பில், 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ச.அருண்ராஜ் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் மூலம் மக்களவை பொது தோ்தலுக்கான ‘உங்கள் வாக்கு மூலம் உங்கள் குரலை உயா்த்துங்கள்’ என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா். மேலும், கோவளம் ஊராட்சியின் சாா்பாக விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும் கலைப் பண்பாட்டுத் துறையின் மூலம் ‘நமது வாக்கு 100 சதவீத வாக்கு, 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம்’ என்ற வாசகத்தின் கீழ் கலை நிகழ்ச்சிகளை நடத்தினா். பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என கடற்கரையில் மாமல்லபுரம் சிற்பக் கலைக் கல்லூரி சாா்பில் மணல் சிற்பக் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அனாமிகா ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்சிவகலைச்செல்வன், திருப்போரூா் வட்டாட்சியா் (மகளிா் திட்ட இயக்குநா்) மணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.