வளர் இளம் பருவத்தினருக்கான உணவு பழக்கங்கள் குறித்து விழிப்புணர்வு
நாகப்பட்டினம் அருகே சங்கமங்களம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் வளர் இளம் பருவத்தினருக்கான உணவு பழக்கங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம் , சங்கமங்களம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வளர் இளம் பருவத்தினருக்கான உணவு பழக்கங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தமிழரசன் தலைமையில் நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர் ஆ.வைதேகி வரவேற்புரையாற்றினார். இடைநிலை ஆசிரியர்கள் மு.ஜெயந்தி, மற்றும் பா.தேவிகா முன்னிலை வகித்தனர். நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில் " மாணவர்கள் இளம் வயதிலேயே நல்ல உணவு பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். சுத்தமான மற்றும் சுகாதாரமான உணவு வகைகளை உண்ணவேண்டும். தன் சுத்தத்தை பராமரிக்க வேண்டும். துரித உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். கடைகளில் உணவு பொருட்கள் வாங்கும்போது தயாரிப்பு விபரங்கள் முழுமையாக உள்ளவற்றையே வாங்க வேண்டும். உணவு விற்பனை இடங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நேரடியாகவோ, பெற்றோர் மூலமாகவோ அல்லது பள்ளி ஆசிரியர்கள் வழியாகவோ உணவு பாதுகாப்பு மாநில ஆணையரகத்திற்கு 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் உரிய முறையில் நடவடிக்கைகள் எடுப்பார்கள். தேவையற்ற உணவுகள், ஈ மொய்த்த மற்றும் திறந்த நிலையில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளை வாங்கி உண்ணக்கூடாது. பாதுகாப்பான தேவையான உணவை உண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் " என்று பேசினார்.