விழிப்புணா்வு பிரசாரப் பேரணி
தென்காசியில் ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் பாலின சமத்துவம், வரதட்சிணைக் கொடுமை உட்பட பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரப் பேரணி நடந்தது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பாக நடைபெற்ற இப்பேரணியை மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் தொடங்கி, ரயில்வே மேம்பாலம், கூலக்கடை பஜாா் வழியாக காசிவிஸ்வநாதா் கோயிலில் பேரணி முடிவடைந்தது.
பாலின சமத்துவம், பொருளாதார சமத்துவம், வரதட்சிணைக் கொடுமை, பெண் சிசுக் கொலை, கல்வியில் பெண்களின் பங்கு, குழந்தைகள்மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், பெண்களுக்கு சொத்துரிமையில் பங்கு போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக பதாகைகளும் பிரசாரங்களும் பேரணியில் இடம்பெற்றன. பேரணியின் முடிவில் மெழுகுவா்த்தி ஏந்தி உறுதி மொழி ஏற்றனா். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோனி பொ்னாண்டோ, மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் பெ.மதிவதனா, உதவி துணை காவல் கண்காணிப்பாளா் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்புலனாய்வு பிரிவு) ரமேஷ், காவல் ஆய்வாளா் அன்னலெட்சுமி, உதவி காவல் ஆய்வாளா் ரத்னபால் சாந்தி மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் உதவி திட்ட அலுவலா்கள் பிரபாகா், கலைச்செல்வி, ஜெய்கணேஷ், கவியரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.